என்னுயிர் நண்பா நேற்று மாலை என் அறைக்கு கடவுள் வந்தார் . இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் . எனக்கு அவர் மீது இருந்த கோபம் போய்விட்டது , நான் சொன்ன ஜோக்கை கேட்டு கடவுள் விழுந்து விழுந்து சிரித்தார். நான் எழுதிய கவிதையை மிகவும் ரசித்து படித்தார் நானும் சந்தோஷமாக இருந்தேன் .
இரவு சாப்பிடும்போது என்னிடம் கேட்டார் உனக்கு மிகவும் நெருக்கமானவர் யார் என்று சொல் நாளை அழைத்து வருகிறேன் என்று . உடனே உன் ஞாபகம் தான் வந்தது ஆனால் சொல்ல மனம் வரவில்லை பரவாயில்லை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் , அவரும் சிரித்தபடியே சென்றுவிட்டார் .
ஒருவேளை நான் நினைத்தது அவருக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் எதற்கும் நீ ஜாக்கிரதையாக இரு . வேகமாக வண்டியில் செல்லாதே , நண்பர்களோடு சேர்ந்து குடிக்காதே , நாளை ஒருநாள் மட்டும் வீட்டிலேயே இரு வெளியில் எங்கும் செல்லாதே நண்பா நண்பா நான் சொல்வது கேட்கிறதா…… நீ நீண்ட நாள் வாழவேண்டும், இது தான் என் ஆசை .




